Pages

Monday, October 21, 2013

சீ.ஊ.போ

வட பழனியில் தங்கி plaza manner அப்பார்ட்மெண்டில் அனிமேசன் படித்துக்கொண்டிருந்த சமயம்.நாமும் ஒரு நாள் இதைப்போல ஒரு அப்பார்ட்பெண்ட் வீடு சொந்தமாக வாங்கிவிட வேண்டும் என்ற கனவோடு இருந்தேன்.
அந்த குடியிருப்பில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட யாரென்றே அறிமுகப்படுத்திக்கொண்டதில்லை.எதிர் வீட்டில் 50 வயதிற்கு மேலிருக்கும்ஒரு பெண்மனி மட்டும்  எப்போதாவது பேசுவார்.”என்ன தம்பி
இப்போ தான் வறீங்களா.., சாப்டீங்களா..” . “ஆமாங்மா ..சாப்ட்டோம்”என்பதைபோல இயல்பான வார்த்தைகளோடு சரி.அந்த ஓரிரு வார்த்தைகள் பேசுவதும் அவர் மட்டும் தான்.

ஒருமுறை நானும் நமது ஃபேஸ்புக் ரோமியோ sivafxம் வெளியே சென்றுவிட்டு அறைக்கு வந்தோம்.அப்போது எதிர் வீட்டில் ஐந்தாறு பேர் புதிதாக உட்கார்ந்திருந்தார்கள்.சரி ஏதோ விசேசம் போலிருக்கிறது
என்று எங்கள் அறைக்கு உள்ளே போய் விட்டோம்.உள்ளே போன பிறகு தான் சொன்னார்கள் எதிர்வீட்டில் இருந்த பென்மனி இறந்து விட்டார் என்று.

எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.அவர் இறந்ததை காட்டிலும்
அவர் இறப்பிற்க்காக வந்த சொந்தம் இவ்வளவு தானா என்பதே அதிர்ச்சிக்கு காரணம்.இதே நம்ம ஊரா இருந்திருந்தா ரொம்ப சாதாரன மனிதன் இறந்திருந்தா கூட இன்னேரம் ஆயிரம் ஆயிரத்தைனூரு பேர் கூடி இருப்பங்களே என்று வியப்பு.இந்த பெண்மனி இதுவரை சம்பாதித்தது இந்த ஏழெட்டு பேர் தானா என பெரிய குழப்பத்திற்க்கு ஆளாகிப்போனேன்.

எனது குரு அன்பு சார் சொன்னார் “சிட்டில எல்லாம் இப்படிதான் ஊர்ல மாதிரி எல்லாரும் வேல வெட்டிய விட்டுட்டு வந்து ஆறுதல் சொல்லிகிட்டு இருக்க மாட்டாங்க”என்று.
ஆம் எங்க ஊர் பக்கமெல்லாம் ஒருவர் இறந்து விட்டால் பெரும்பாலும் ஊரில் யாரும் வேலைக்கு போக மாட்டார்கள்.சுற்றுபக்கத்து வீடுகளில் சமைக்கமாட்டார்கள்.திருவிழாவோ வேறு ஏதேனும் கொண்டாட்டங்களோ இருந்தால் தள்ளி வைத்து விடுவார்கள்.இறந்தவர்களின் குடும்பத்திலுருப்பவர்கள் ஓரளவு மனநிலை தேறும் நாள்வரை அவர்களுடன் உறவினர்கள் இருப்பார்கள்.”சரி அழுவாதப்பா அவரு செத்துட்டா நாங்கல்லாம் இல்லயா ஒனக்கு,ஒனக்கு எதா இருந்தாலும் நாங்க பாத்துக்குவோம் நீ தைரியமா இரு”என்று சொல்கிற வார்த்தைகள்
தரும் ஆறுதலை வார்த்தையால் விவரிக்க முடியாது.

எதிர்வீட்டு பெண்மனியை எடுத்து செல்வதற்க்காக ஒரு ஆம்னி வண்டி வந்திருந்தது.பிணத்தை வெளியே தூக்கி வந்தார்கள்,நாங்களும் இணைந்து கொண்டோம்.நான் பிணத்தை பார்த்ததை விட சுற்றி இருப்பவர்கள் முகத்தையே பார்த்தேன்.எல்லோரும் சிறிதும் பெரிதுமான விசும்பலோடு நிறுத்திக்கொண்டனர்.நாம் அழுவதை பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் யாராவது பாத்தால் என்ன ஆவது என்று நினைத்துகொண்டே அழுததை போல் அழுதார்கள்.

நமது ஊரிலெல்லாம் பிணம் வீட்டை விட்டு போகும் போது ஓவென கதறுவார்கள்.இத்தனை காலமாக நீ இந்த வீட்டில் இருந்த போது எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தோம்..இனி நீ இந்த வீட்டிற்க்கு எப்போது வரப்போகிறாய்..நீ இல்லாத இந்த வீட்டில் நாங்கள் எப்படி வாழப்போகிறோம்..என்ற மனக்குமுறல் தான் அந்த கதறல்.

இங்கே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.ஆம்னி வண்டியில் பிணத்தோடு சிலரும் மற்றொரு வண்டியில் சிலரும் போக நானும் sivafx ம் டூ வீலரில் பின்தொடர்ந்தோம்.

கண்ணம்மா பேட்டை மின்சார சுடுகாடு.பிணத்தை ஒரு ட்ராலியில் வைத்து உள்ளே தள்ளினார்கள்.முன்பக்க கதவு மெதுவாக கீழே இறங்கி கொண்டிருந்தது.முழுவதுமாய் இறங்குவதற்க்குள்ளே துணியெல்லாம் பொசுங்க தொடங்கியது.
தனக்காக அழுவதை கூட நாகரீக குறைச்சலாக நினைக்கும் ஐந்தாறு பேரை மட்டுமே சம்பாதிக்க முடிந்த நகர வாழ்வின் சதை வடிவம் எரிந்து முடிந்தது.

கதவை திறந்த போது சாம்பலாக கொட்டிக்கிடந்தது.அந்த சாம்பல் குவியலில் எனது  “அப்பார்ட்மெண்ட் கனவு” எந்த இடத்தில் கிடக்கிறது என பிரித்து பார்க்க முடியவில்லை.

எனது அறைக்கு போன பிறகு ஏற்பட்ட மனஓட்டம் விவரிக்க முடியாதது.என் அறையிலுருந்த சுவிட்ச் பாக்ஸில் எழுதி வைத்தேன் “சீ.ஊ.போ.” என்று.

என் அறைக்கு வருபவர்கள் எல்லோரும் கேட்பார்கள்  “அது என்ன சீ.ஊ.போ. என்று.  “அது எனது குறிக்கோள் அவ்ளோ தான் எக்ஸ்ப்ளைன் எல்லாம் பண்ண முடியாது முடிஞ்சா கண்டு புடிச்சுக்கோங்க”என்று சொல்லி விடுவேன்.

ஒருமுறை அப்பா அறைக்கு வந்திருந்தார்.சுவிட்ச் பாக்ஸயே பார்த்துக் கொண்டிருந்தவர் “எதுக்குடா சுச்சி பொட்டீல
 ‘சீக்கிரம் ஊருக்கே போயிருனும்’னு எழுதி வச்சுருக்ற”என்றார்.

ஆம் ..ஆச்சரியமாக அவர் கண்டுபிடித்து விட்டார். அது தான் சரி.

அந்த அறையை காலி செய்து கொண்டு வந்த பிறகு  வெங்காயம் படத்தின் post productionக்காக தான் சென்னை போனேன்.இங்கு வந்த பிறகு பணக்காரத்தனமான,நவீனத்துவமான வாழ்வை வாழ முடியாவிட்டாலும் நிம்மதியான எனக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
தேங்ஸ் டூ தேனாம்பேட்டை சுடுகாடு

((((((( @@@ இது எனது உணர்வின் வெளிப்பாடு அவ்வளவே.எல்லோரும் எனது கண்ணோட்டத்திலே பார்க்கமுடியாது.இது எனது மனநிலை..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை,சூழ்நிலை ,பிரச்சனைகள் அதற்க்கான வாழ்வியல் சூழல் நிர்பந்தங்கள் வேறு வேறு என்பதை அறிவேன்)))))

Friday, December 16, 2011

சங்ககிரி ராஜ்குமார் sankagiri rajkumar image


sankagiri rajkumar
 சங்ககிரி ராஜ்குமார்

sankagiri rajkumar
 சங்ககிரி ராஜ்குமார்1

Saturday, December 10, 2011

மாலைமலர்



                            
                                                                 வெங்காயம்
                                                                          சனிக்கிழமை, ஆகஸ்ட் 27, 4:54 PM IST

                      
ஜோதிட போலிகளை தோலுரிக்கும் கதை....

கிராமங்களில் ஜோதிடர்கள், சாமியார்கள் திடீர் திடீரென காணாமல் போகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் நாடே அல்லோலப்படுகிறது. சாமியார்களை கண்டு பிடிக்கும் பொறுப்பை போலீஸ் அதிகாரி அலெக்சாண்டரிடம் மேலிடம் ஒப்படைக்கிறது.

அவர் சல்லடை போட்டு தேடி கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கிறார். பிறகு பிளாஷ்பேக்....

இரு நண்பர்கள் சேர்ந்து தொழில் துவங்க முயற்சித்து ஜோதிடரை அணுகுகின்றனர். அவர் ஒருவனுக்கு தவறான பலன் சொல்லி நண்பர்களை பிரிக்கிறார். கெட்ட பலன் சொல்லப்பட்ட நண்பன் விரக்தியில் தற்கொலை செய்கிறான். அவன் பாட்டி ஆதரவின்றி பைத்தியம் ஆகிறாள்.

தெருகூத்து கலைஞர் நோய்வாய்ப்பட்ட மகனுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிக்கு போகிறார். அங்கு நரபலி கும்பலிடம் சிறுவன் அகப்பட்டு சாகிறான். திருமணம் ஆகாத பெண்களுக்கு தோஷம் கழிக்கும் சாமியாரின் காமவேட்டையில் சிக்கி இளம் பெண் பலியாகிறாள்.

பாதிக்கப்பட்டவர்கள் கடத்தலுக்கு பின் மாயமாய் இருப்பது கண்டறியப்படுகிறது. ஜோதிடர்கள் மீட்கப்பட்டார்களா? என்பது கிளைமாக்ஸ்...

அழுத்தமான கதை உயிரோட்டமான கதாபாத்திரங்களில் காட்சிகளை நகர்த்தி மனதை பிழிந்தெடுக்கிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். பேரனுக்காக வேலைக்கு போகும் பாட்டியும், தன்னால் அவள் உயிருக்கு பாதிப்பு வரும் என்று ஜோதிடர் சொன்ன தவிப்பில் உயிரை மாய்க்கும் பேரனும் நெஞ்சை ரணமாக்குகின்றனர்.

மகனுக்கு நோய் பார்க்க ஆஸ்பத்திரி போய் அவனை நரபலிக்கு காவு கொடுத்து கதறும் அந்த தெருக்கூத்து கலைஞர் கண்களை குளமாக்குகிறார். அலெக்சாண்டர்- பவினா காதல் கிராமிய கவிதை...

சத்யராஜ் ஒரு பாடலுக்கு தலைகாட்டி நிமிர வைக்கிறார். பரணி இசையில் பாடல்கள் இனிமை நேர்த்தியும் வீரியமும் நிறைந்த கதை...

கிளைமாக்சில் சிறுவர்கள் மேதாவித்தனமாக பேசுவது யதார்த்தத்தில் ஒன்றவில்லை.

தினமணி


                                                                                                                                                                                

                                                    

                                                                     First Published : 22 Aug 2011 12:00:00 AM IST

மூகத்தில் மூடப் பழக்க வழக்கங்களைப் பரப்பி அவற்றின் மூலம் ஆதாயம் அடைந்து வரும் சுயநலவாதிகளின் உண்மை சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ள நல்ல படம்.
ஒரு கிராமத்தில் திடீர் திடீரென சாமியார்களும் ஜோதிடர்களும் காணாமல் போகிறார்கள்.
காவல்துறை விசாரணையை முடுக்கிவிடுகிறது. கடத்தப்பட்டவர்கள் மீட்கப்படுகிறார்களா? கடத்தியது யார்? ஏன் கடத்தினார்கள்? என்பதை விறுவிறுப்பாக சொல்வதுதான் படம். இந்தக் கதையோட்டத்தில் ஒரு காதல் ஜோடியின் ரசிக்கத்தக்க குறும்புகளை இணைத்து படத்துக்கு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சங்ககிரி ராச்குமார்.
போலி சாமியார்களும், பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கும் ஜோதிடர்களும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை நெகிழ்ச்சியான காட்சிகள், நேர்த்தியான திரைக்கதை, சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் இயல்பான நகைச்சுவை வசனங்கள் ஆகியவற்றின் மூலம் யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிறார் இயக்குநர்.
கதைக்குப் பொருத்தமான முகங்களைத் தேர்ந்தெடுத்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்திருப்பதால் அறிமுக நடிகர்களின் நடிப்பை ரசிக்க முடிகிறது. குறிப்பாக,
ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் இடம்பெறும் நாடகக் கலைஞரின் வறுமைச் சூழல், பிள்ளைப் பாசம், மகனின் மருத்துவச் செலவுக்காக மருத்துவமனைக்கு எதிரே கூத்துக்கட்டும் காட்சிகள் மனதை நெகிழச் செய்கின்றன.
நாடகக் கலைஞராக நடித்துள்ள எஸ்.எம்.மாணிக்கம் (இயக்குநரின் தந்தை) தமிழ் சினிமாவில் ஜொலிக்க வாய்ப்புள்ளது. இயக்குநர் ராச்குமாரும் படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய சேலத்து தமிழ் உச்சரிப்பும் யதார்த்தமான நடிப்பும் அவரை ஒரு தேர்ந்த நடிகராக அடையாளம் காட்டியுள்ளன.
நாயகன் அலெக்சாண்டர், நாயகி பவீனா, பூ விற்கும் சிறுமி, சைக்கிள் கடைச் சிறுவன், டீ கடை சிறுவன், மனநலம் பாதித்த மூதாட்டி உள்ளிட்ட பலருடைய பங்களிப்பும் படத்தில் குறிப்பிடத்தக்கது.
கெüரவ வேடத்தில் வரும் நடிகர் சத்யராஜின் பேச்சில் பகுத்தறிவுச் சிந்தனை பட்டொளி வீசி பறக்கிறது. பரணியின் இசையில் "அச்சமென்ன அச்சமென்ன ஆசைத் தமிழே...', "அரைக்கிறுக்கன் அரைக்கிறுக்கன் அடியே...' பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் மிரட்டல்.
படத்தில் ஆங்காங்கே இடம்பெறும் சில "லாஜிக்' மீறல்கள், க்ளைமாக்ஸ் காட்சியில் வயதுக்கு மீறிய அனுபவத்துடன் சிறுவர்கள் பேசும் பகுத்தறிவு வசனங்கள் போன்றவற்றை படத்தின் சில குறைபாடுகளாகக் குறிப்பிடலாம் என்றாலும் அவற்றையும்கூட கண்ணில் தெறித்த பன்னீர்துளிகளாகக் கருதி படக்குழுவினரைக் கைகுலுக்கலாம்.
முதல் படத்திலேயே இது போன்ற ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து நல்ல கருத்துகள் மூலம் ரசிகர்களிடம் விழிப்புணர்ச்சியை விதைக்க முற்பட்டுள்ள இயக்குநர் ராச்குமார் பாராட்டுக்குரியவர்.
சிறிய பட்ஜெட்டில் தரமாகவும் நிறைவாகவும் உருவாக்கப்பட்டுள்ள இது போன்ற படங்களுக்கு போதிய விளம்பர வெளிச்சம் கிடைத்து, மக்களைச் சென்றடைந்தால்தான் தமிழ் சினிமாவில் சிறு முதலீட்டுப் படங்களின் வரவு அதிகரிக்கும்.
"வெங்காயம்' - புதிய முயற்சிக்கு ஜெயம்!

ஆனந்த விகடன்


                        

                                   வெங்காயம்
சாமியார்கள், ஜோசியம், பரிகாரம் இவை எல்லாம் உரித்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை என்று சொல்வதுதான்...  'வெங்காயம்!
ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம்.
முதல் படத்திலேயே மூட நம்பிக்கைகளுக்கு எதிராகச் சாட்டையடி கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் சங்ககிரி ராச்குமாருக்கு வாழ்த்துக்கள். 'ரமணா’, 'சிட்டிசன்’, 'சாமுராய்எனத் தமிழ் சினிமா பார்த்துப் பழகி, அலுத்துச் சலித்த கடத்தல் சமாசாரம்தான். ஆனால், மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும்தான் கடத்தல்காரர்கள் என்பதும், அவர்களுக்கு சாமியார்கள் மேல் என்ன கோபம் என்று விவரிப்பதும் திரைக்கதையைப் புதிய ரூட்டில் கூட்டிச் செல்கிறது. படத்தில் பிரசாரம் குறைவாகவும் கிளைக் கதைகள் சுவாரஸ்யமாகவும் இருப்பது ஆறுதல் அம்சம்.
நாயகனாக அலெக்ஸாண்டர். ஊருக்குப் பயந்து ஒதுக்குப்புறத்தில் காதலிக்கும் கிராமத்து போலீஸ் வேடத்தை யதார்த்தமாகப் பிரதிபலித்து இருக்கிறார். 'கார் வளைவுல திரும்பும்போது நாலு வீல் தடம் பதியும். ஆனா, இங்க ரெண்டுதான் இருக்குஎன்று 'புதிய டைப்கடத்தல் வாகனத்தை அவர் கண்டுபிடிக்கும் இடம்... பளிச் ஐடியா. நாயகி பவீனா... பக்கத்து வீட்டுப் பெண். பரிகாரம் என்கிற பெயரில் சாமியார் காமச் சேட்டை செய்யும்போது 'அம்மா புரிஞ்சுக்கோம்மாஎன்று பதறும் இடத்தில் நம்மையும் பதறவைக்கிறார்.
பாசமுள்ள பாட்டியின் பேரனாக இயக்குநர் ராச்குமாரும் பாட்டியாக வெள்ளையம்மாளும் படு யதார்த்தம். தெருக்கூத்துக் கலைஞர் மாணிக்கம் மகனுக்கு மருத்துவம் பார்க்கப் போகும் இடத்தில், குழந்தையை ஏமாற்றிக் கூட்டிப் போய் நரபலி கொடுக்கப்படும் இடம் முகத்தில் அறையும் கொடூரம். மகனுக்காகப் பிச்சை கேட்கும் இடத்தில், 'நம்புங்க சாமி... என் புள்ளை உயிருக்காகத்தான் பிச்சை எடுக்குறேன். நான் நிஜமான கூத்துக் கலைஞன்தான்!என்று நடுத்தெருவில் கூத்துக் கட்டி ஆடும்போது நெகிழவைக்கிறார் மாணிக்கம்.
பரணியின் பின்னணி இசை கடத்தல் காட்சிகள் போன்ற ஒரு சில இடங்களில் ஈர்த்தாலும், முழுமையாக ஈர்க்கவில்லை. ராகுவின் ஒளிப்பதிவில் மலையில் கார் தொங்கும் காட்சி மட்டும் பயமுறுத்துகிறது.
சாமியார்களைத் தள்ளுவண்டி, மண்ணெண்ணெய் பாட்டில், தீப்பந்தம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறுவர்கள் சிம்பிளாகக் கடத்துவதும், யாரும் வராத மலைக் கோயிலில் கட்டிவைத்து கேள்வி கேட்டுத் திணறடிப்பதும், கொலை, பழிவாங்கல் என்று வன்முறைப் பக்கம் போகாமல், சாமியார்களைத் திருந்தச் சொல்லி கட்டுகளை அவிழ்த்துவிடுவதும்.. இயல்பான சுவாரஸ்யம்!
படத்தில் சின்னச் சின்ன கிளைக் கதை களை ஒன்றிணைக்கும் கோவையில் செம ஓட்டை. ஜவ்வாக இழுக்கும் திரைக்கதை ஆங்காங்கே கொட்டாவி விடவைக்கிறது. அடிக்கடி அமுங்கும் டப்பிங் வாய்ஸ், அனுபவம் அற்ற கேமரா கோணங்கள், எங்கே என்று கேட்கவைக்கும் எடிட்டிங் ஆகியவை 'அமெச்சூர்என்பதை அடையாளம் காட்டிவிடுகிறது. ஆனாலும், சமூக அக்கறையுடன் பகுத்தறிவுக் கதை சொன்ன விதத்தில் இந்த வெங்காயம்... காரம்தான்!