Pages

Saturday, December 10, 2011

தினமலர்






நடிகர் : அலெக்ஸாண்டர்
நடிகை : பவீனா
                                                             இயக்குனர் :சங்ககிரி ராஜ்குமார்


ஈ.வே.ரா பெரியார் அடிக்கடி அலுப்பில் உதிர்த்த வார்த்தை, ஜெட் வேகத்தில் விலைவாசி உயர்ந்து அவ்வப்போது இந்திய பார்லிமென்ட்டையே உலுக்கிய அத்தியாவசிய உணவு பண்டம்... என இன்னும் பல சிறப்புகளை கொண்ட "வெங்காயம்", தற்பொழுது தமிழ் பட டைட்டிலாகவும் ஆகியருப்பதே ஆச்சர்யம்!

சமூகத்தில் நீக்கமற நிறைந்துவிட்ட போலிச்சாமியார்களையும், போலி ஜோதிடர்களையும் தோலுரித்து, வேர் அறுக்க முயன்றிருக்கும் ஒரே காரணத்திற்காக, அந்த உண்ணதமான காரியத்திற்காக "வெங்காயம்" படத்தை உரிக்க உரிக்க பாராட்டலாம்.

தமிழகத்தில் உள்ள சேலம் பகுதியில் போலி சாமியார்களும், போலி ஜோதிடர்களும் திடீர், திடீரென காணாமல் போக, அவர்களை கடத்தியது யார்? கடத்தலுக்கான காரணம் என்ன? கடத்தப்பட்டவர்களின் கதி என்ன...? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கும் படம்தான் "வெங்காயம்". இந்த கதையோடு ஒரு அழகிய கிராமத்து இளஞ்ஜோடியின் காதல் கதையையும் கலந்து கட்டி, கலக்கலாக கதை சொல்லி இருக்கிறார் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய வரவான இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். 

பெரியாரின் தொண்டன், பகுத்தறிவு பாசறையாளன் என்று ஓட்டுக்காக கூக்குரல் இட்டபிடி, வீட்டிலே‌ ரகசியமாக சாமி கும்பிட்டுவிட்டு, ஏட்டில் ஜோதிடம் பார்க்கும் நம் அரசியலர் தலைவர்கள் செய்யாததை, தனி ஒரு மனிதனாக, தன் சொத்து பத்துகளை எல்லாம் விற்று திரைப்படமாக எடுத்திருக்கும் இயக்குநர் ராஜ்குமார் நிச்சயம் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்! சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டும் யதார்த்தமான நகைச்சுவை வசனங்கள், காட்சிகளோடு, போலி ஜோதிடர்கள், போலி சாமியார்களின் முகத்திரையை கிழித்திருக்கும் இயக்குநர், மக்களின் அறியாமைதான் அத்தனைக்கும் காரணம் என்பதை சொல்லவும் தவறவில்லை!

கதைக்கும், காட்சிகளுக்கும் பொருத்தமான யதார்த்தமான கிராமத்து மனிதர்களை‌யே தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அரிதாரம் பூசாமல் அழகாக நடிக்க, இல்லை... இல்லை... கதையோடு கதாபாத்திரங்களாக வாழவிட்டு, படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருப்பதால், அறிமுக நடிகர் நடிகைகள் ஒவ்வொருவரும் நம் அக்கம், பக்கத்து வீட்டு ஆசாமிகள் மாதிரி, நம்முள் பச்சாதாபத்தை ஏற்படுத்தி ஒருவித பாசத்தையும் உண்டு பண்ணுவது "வெங்காயம்" படத்தின் பெரும்பலம். 

அதிலும் அந்த நாடக கலைஞராக வரும் மாணிக்கம், மகளை ஊரில் தனியாக விட்டுவிட்டு பாண்டிச்சேரி வந்து, மகனை பறி‌கொடுத்து, காசுக்காக அலைந்து திரிந்து தானும் மரித்து போவது, கல் நெஞ்சுக்காரர்களையும் கரைத்து விடும் காட்சிகள். நாடகக் கலைஞராகவே வாழ்ந்திருக்கும் மாணிக்கம், நிஜத்தில் இப்பட இயக்குநர் ராஜ்குமாரின் தந்தையாவார். தந்தை மேற்படி கதாபாத்திரத்தில் எட்டடி பாய்ந்துள்ளார் என்றால், நூற்பாலை தறியில் வேலை செய்து கொள்ளும் பாத்திரத்தில் நடித்து, போலி ஜோதிடரின் குரூர பலன்களை கேட்டு பயந்துபோய், தற்கொலை செய்து கொள்ளும் பாத்திரத்தில் 16 அடி பாய்ந்து, படம் பார்க்கும் ரசிகர்களின் விழியோரம் கண்ணீர் துவளைகளை வரவழைத்து விடுகிறார் இயக்குநர் ராஜ்குமார். அவர் பேசும் சேலத்து தமிழின் யதார்த்தம் மாதிரியே, கதாநாயகன் அலெக்சாண்டர், கதாநாயகி பவீனா, பெற்றோரை பறிகொடுத்து பழிவாங்க துடிக்கும் சிறுவர் சிறுமிகள், பேரனை பறிகொடுத்த பாட்டி என எல்லோரும் பளீச் பங்களித்திருப்பதும், ரசிகர்களுக்கு அவர்கள் மீது பாச்சாதாபத்தை ஏற்படுத்துவதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்!

கெஸ்ட்ரோலில் "அச்சமென்ன, அச்சமென்ன ஆசைத்தமிழே..." எனத் தொடங்கி தொடரும் புரட்சி பாடல் ஒன்றுக்கு சிறுவர், சிறுமியர்களுடன் ஆடிப்பாடி அசத்தியிருக்கும் அந்த "தகடுதகடு" நடிகர், பெரியார் படத்திற்குப்பின், பிறருக்கு பிரயோஜனமாக நடித்திருக்கும் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்! நடிகர் இப்படத்தில் இப்படி ஒரு பாடலில் இடம் பிடித்திருப்பது பலம் என்றாலும், "தகடு தகடு" நடிகர் வெங்காயம், பெரியாரிசம் என எல்லா தரப்பு ரசிகர்களும் இப்படத்தை காண வருவதற்கு இவரே தடையாக தெரிந்தாலும் தெரிவார் என்பது பலவீனம்!

பரணியின் இசையில் மேற்படி பாடல்கள் மட்டுமின்றி, படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் இரண்டொரு பாடல்களும், பின்னணி இசையும் ஹிட்! ஜெட் என்று அதிரடியில் அசரடிக்கிறது பேஷ், பேஷ்!

பாண்டிச்சேரி நரபலி ஜோதிடரை சேலத்திற்கு சிறுவர்கள் கடத்தி வந்தது எப்படி? என்பது உள்ளிட்ட இன்னும் சில லாஜிக் மீறல் காட்சிகளும், க்ளைமாக்ஸில் சிறுவர்கள் அவர்களது வயதுக்கு மீறி பகுத்தறிவு என்பது பட்டறிவு தான்! என்பதை உணராமல், பகுத்தறிவு பேசுவதும் வேடிக்கை என்றாலும், வாடிக்கையான தமிழ் சினிமாக்களில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும் காரணத்திற்காகவே "வெங்காயம்" படத்தையும், அதன் இயக்குநரையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்!

பகுத்தறிவு வாதிகளிலும் பகற்கொள்ளையர்கள் இருப்பதுபோல், ஜோதிடர் சாமியார்களிலும் போலிகள் உண்டு, அவர்களிடம் உஷாராக இருங்கள்...! என்று போதித்திருக்கும் "வெங்காயம்", பகுத்தறிவு மனம் வீசும் "பெருங்காயம்".

தின கரன்

   போலிச் சாமியார்களுக்கு எதிரான போர்.........................................




நாட்டில் உள்ள போலி சாமியார்கள், ஜோதிடர்கள் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். அவர்களை கடத்தி காட்டில் கொண்டு வைக்கிறார்கள். கடத்தப்பட்டவர்களையும், கடத்தியவர்களையும் தேடுகிறது போலீஸ். கடத்தப்பட்ட போலிகளை, போலீஸே போட்டுத் தள்ளுகிறது. கடத்தப்படும் போலி சாமியார்கள், ஜோதிடர்கள் செய்த அட்டூழியம் என்ன? கடத்தியவர்கள் யார்?. கடத்தப் பட்டவர்களை போலீஸே சுட்டுக்கொல்வது ஏன் என்பதற்கான விடைதான் படம். பாட்டியுடன் வறுமையில் வசிக்கும் ராஜா, தன் நண்பருடன் இணைந்து தொழில் செய்ய நினைக்கிறார். ஜோதிடர் உள்ளே புகுந்து, ‘சேர்ந்து தொழில்செய்தால் நாசம்தான்என்று கூற, மனசு தாங்காமல் ராஜா தற்கொலை செய்கிறான். ஒரே பேரனை இழந்த பாட்டி பைத்தியமாகிறாள்.

பாட்டி, பேரனுக்குமான அன்பை யதார்த்தமாகச் சொல்லும் இந்த எபிசோட் அற்புதம். திருமண தோஷம் கழிக்க செல்லும் ஹீரோயினை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயல, அந்த முயற்சியில் ஹீரோயின் பலியாவது நெகிழ்ச்சி. தனக்கு சக்தி வேண்டும் என்பதற்காக கள்ளம் கபடமற்ற சிறுவனை நரபலிகொடுப்பது பயங்கரம். இப்படி நாம் அன்றாடம் பத்திரிகையில் படிக்கும் செய்திகள் காட்சிகளாக விரியும்போது போலி சாமியார்களுக்கு எதிராக படத்தில் வரும் வசனங்களும், காட்சிகளும் நம்மை அறியாமலேயே கைதட்ட வைக்கிறது.

உள்ளுர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு அலெக்சாண்டர் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் பவினாவும் அப்படியே கிராமத்து பெண்ணாக வலம் வருகிறார். பெரிய ஏரியின் நடுவில் இருக்கும் குட்டித் தீவில் அவர்கள் வளர்க்கும் காதல் அழகான நாட்டுப்புற பாட்டு. போலி சாமியார்களுக்கு எதிராக போராடும் சிறுசுகளின் கண்களில் அப்படி ஒரு கோபம், வசனத்தில் அப்படி ஒரு நெருப்பு. பிற்பகுதியில் சீனுக்கு சீன் கைதட்டலை அள்ளிப்போகிறார்கள். கவுரவ தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடித்து படத்துக்கு ஸ்டார் வேல்யூ கொடுத்திருக்கிறார் சத்யராஜ். பரணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ராகுவின் கேமரா கிராமத்து அழகை அள்ளி தந்திருக்கிறது. கடல்போன்ற ஏரி, படகு பயணம், நான்குபுறமும் மலைகள் என சினிமா கேமரா கண் வைக்காத இடத்தில் படம்பிடித்து தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் இடமா என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

நல்ல நோக்கம், நல்ல இயக்கம், நறுக் வசனங்களால் கவனம் ஈர்க்கிறார் புதுமுக இயக்குனர். மெகா கடத்தல்களை சிறுவர்கள் செய்வதிலும், அதை கண்டுபிடிக்க, ஒரேயொரு சப் இன்ஸ்பெக்டர் மட்டுமே பயன்படுத்தப்படுவதிலும் லாஜிக் இல்லை. மற்றபடி போலி சாமியார்களுக்கும், ஜோதிடர்களுக்கும் காயம் ஏற்படும் அளவுக்கு சவுக்கடி கொடுக்கிறது வெங்காயம்.

-
தினகரன் விமர்சனக்கு
ழு.

Thursday, December 3, 2009

கருஞ்சட்டைதமிழர்

அறிவியல் சாதனங்கள் மூட நம்பிக்கைகளைப் பரப்புவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் நமது நாட்டில், அதை அறிவுச் சாதனமாக மாற்றும் சில முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் மூட நம்பிக்கைகளைப் பரப்புவதை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கும் திரை (சின்னத் திரை+பெரியதிரை)த் துறைகளிலும் பகுத்தறிவை வளர்க்கும் சில முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
சில படங்களில் நகைச்சுவை மூலமாகவும், சில படங்களில் சிறுசிறு வசனங்கள் மூலமாகவும். உதாரணமாக, ‘பராசக்தி’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, போன்ற படங்கள் மிகுதியாகப் பகுத்தறிவுக் கருத்துகளைத் தாங்கி வந்தன. அந்த வரிசையில் ‘வெங்காயம்’ என்ற திரைப்படம் தயாராகி வருகின்றது. அந்தப் படத்தின் இயக்குனர் சங்ககிரி திரு ராஜ்குமார்.
தமிழகத் தொலைக்காட்சிகள் எல்லாம் ராஜராஜேஸ்வரி, அம்மன், நாகம்மா, நாகவல்லி, சுவாமி அய்யப்பன் என்று மூட நம்பிக்கைகளை முறை வைத்துப் பரப்பி வரும் வேளையில், பில்லி சூனியம் என்று ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்கள், சாமியாடிகள் என்ற போர்வையில் காமக்களியாட்டம் போடும் குற்றக் கேடர்கள், மக்கள் அச்சத்தையும், அறியாமையையும் தங்கள் மூலதனமாக்கிக் கொள்ளும் குடிகேடர்களின் உண்மை நிகழ்வுகளைத் தொடராக்கி, அதை மக்கள் தொலைக்காட்சி வாயிலாக வெங்காயம் என்ற தொடராக ஒளிபரப்பி பகுத்தறிவு ஒளி பாய்ச்சி வந்தார் அவர்.
தற்போது இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மீண்டும் அதே (வெங்காயம்)பெயரில் திரைப்படம் ஒன்றினை எடுத்து வருகிறார். அவரை அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவரோடு உரையாட ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நமக்கு ஏற்பட்ட சில அய்யங்களுக்கு விடையும் கிடைத்தது.
அவரிடம் நாம் கேட்ட முதல் கேள்வியே, “வெங்காயம் தொடரின் மூலம் தான் நிறைய கருத்துக்களைச் சொல்லி விட்டீர்களே, பின்பு திரைப்படம் மூலம் எதைச் சொல்லப் போகிறீர்கள்” என்பதே. அதற்கு அவர், “நான் தொட்டுக்காட்டியதெல்லாம் புதர் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கை நிகழ்வுகளில் சிறு துண்டு மட்டுமே. இதைவிட அதி பயங்கர நிகழ்வுகளும், திரைப்படத்திற்காகவே நான் ஒதுக்கி வைத்திருந்த சம்பவங்களும் சேர்ந்ததுதான் வெங்காயம் திரைப்படம்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும் அவரேதான். இயக்குனர் ராஜ்குமார் இந்தப் படத்திற்கான திரைக்கதை, வசனங்களை முடித்துவிட்டுப் பல தயாரிப்பாளர்களை அணுகிப் பார்த்திருக்கிறார். எவரும் முன் வரவில்லை. தயாரிப்பாளர்கள் மொழியில் சொன்னால், ரிஸ்க் எடுக்க எவரும் தயாயராக இல்லை. இவரது அலைச்சலைப் பார்த்த, இவரது தந்தை திரு எஸ். எம். மாணிக்கம் “ஏன் இப்படி அலைகிறாய்? எங்காவது கடன் வாங்கியாவது, நாமே தயாரிக்கலாம்” என்று சொல்லி இருக்கிறார். எனவே இப்படத்தைத் தன் தந்தையார் பெயரிலேயே தயாரிக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பாளர் செ. மா. செந்தில் குமார், கதாநாயகன் அன்பு, இணை இயக்குனர்கள் தஞ்சை ரவி, சம்பத், வெங்கடேஷ், நிர்வாகிகள் சபா, பிரேம் சந்திரசேகரன் போன்ற தொழில் நுட்பக் கலைஞர்களும் பகுத்தறிவுச் சிந்தனை கொண்டவர்கள்தான் என்றும் சொன்னார்.
அது மட்டுமல்ல, இப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடிப்பதற்கு புரட்சித் தமிழர் சத்தியராஜ் அவர்களை அணுகிக் கேட்டிருக்கிறார். கதையைக் கேட்ட சத்தியராஜ் உடனே தேதி ஒதுக்கிக் கொடுத்துவிட்டார் என்பதை நன்றிப் பெருக்கோடு தெரிவித்தார்.
இப்படத்தில் சிறந்த பகுத்தறிவுவாதியும், மக்களால் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளருமான ஒருவர் முதல் முறையாக ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இயற்கை எழில் கொஞ்சும், காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பூலாம்பட்டி, சங்ககிரி மற்றும் ஏற்காடு பகுதிகளில் உருவாகி வரும் வெங்காயம் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பிற்கு மட்டும் ராஜஸ்தான் செல்ல இருக்கிறார்கள்.
திரைப்படம் என்ற மாபெரும் ஊடக சக்தியின் மூலம் அவ்வப்போது மதிக்கத்தக்க படைப்புகள் உருவாவது உண்மைதான் என்றபோதிலும், நம் தமிழகத் திரைப்படங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், காதலையும், காமத்தையும் முதன்மைப்படுத்துவதிலும், கடவுளையும், மதத்தையும் பரப்புவதிலும் தனது பெரும்பாலான ஆற்றலைச் செலவழித்து வந்திருப்பது தெளிவாகப் புரியும்.
அதையும் மீறி எப்போதாவது நல்ல கருத்துகளைத் தாங்கி வந்த படங்கள் கவனிக்கப்படாமல் போனதும், அதைத் தயாரித்தவர்கள் கசப்பான அனுபவங்களைச் சந்தித்ததும் நாமறிந்த ஒன்றே. இதையயல்லாம் தாண்டி பகுத்தறிவைக் கதைக் கருவாகக் கொண்ட வெங்காயம் திரைப்படம் அனைத்துத் தரப்பு மக்களின் மனதையும் ஆக்கிரமிக்கும் படி அதன் திரைக்கதை மிகமிக கவனமாகச் செதுக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார். அவரது முயற்சிகள் வெற்றியடைய கருஞ்சட்டைத் தமிழர் வாழ்த்துகிறது.
- அன்புத் தென்னரசன்

Wednesday, November 11, 2009

எங்களை பற்ற்றி

வெங்காயம் குழுவினர் என்ற பெயரில் சமூக முன்னேற்ற்த்திற்காக பாடுபட இணைந்துள்ளோம்.தற்போது வெங்காயம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்துக்கொண்டிருக்கிறோம்