Pages

Saturday, December 10, 2011

தினமலர்


நடிகர் : அலெக்ஸாண்டர்
நடிகை : பவீனா
                                                             இயக்குனர் :சங்ககிரி ராஜ்குமார்


ஈ.வே.ரா பெரியார் அடிக்கடி அலுப்பில் உதிர்த்த வார்த்தை, ஜெட் வேகத்தில் விலைவாசி உயர்ந்து அவ்வப்போது இந்திய பார்லிமென்ட்டையே உலுக்கிய அத்தியாவசிய உணவு பண்டம்... என இன்னும் பல சிறப்புகளை கொண்ட "வெங்காயம்", தற்பொழுது தமிழ் பட டைட்டிலாகவும் ஆகியருப்பதே ஆச்சர்யம்!

சமூகத்தில் நீக்கமற நிறைந்துவிட்ட போலிச்சாமியார்களையும், போலி ஜோதிடர்களையும் தோலுரித்து, வேர் அறுக்க முயன்றிருக்கும் ஒரே காரணத்திற்காக, அந்த உண்ணதமான காரியத்திற்காக "வெங்காயம்" படத்தை உரிக்க உரிக்க பாராட்டலாம்.

தமிழகத்தில் உள்ள சேலம் பகுதியில் போலி சாமியார்களும், போலி ஜோதிடர்களும் திடீர், திடீரென காணாமல் போக, அவர்களை கடத்தியது யார்? கடத்தலுக்கான காரணம் என்ன? கடத்தப்பட்டவர்களின் கதி என்ன...? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கும் படம்தான் "வெங்காயம்". இந்த கதையோடு ஒரு அழகிய கிராமத்து இளஞ்ஜோடியின் காதல் கதையையும் கலந்து கட்டி, கலக்கலாக கதை சொல்லி இருக்கிறார் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய வரவான இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். 

பெரியாரின் தொண்டன், பகுத்தறிவு பாசறையாளன் என்று ஓட்டுக்காக கூக்குரல் இட்டபிடி, வீட்டிலே‌ ரகசியமாக சாமி கும்பிட்டுவிட்டு, ஏட்டில் ஜோதிடம் பார்க்கும் நம் அரசியலர் தலைவர்கள் செய்யாததை, தனி ஒரு மனிதனாக, தன் சொத்து பத்துகளை எல்லாம் விற்று திரைப்படமாக எடுத்திருக்கும் இயக்குநர் ராஜ்குமார் நிச்சயம் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்! சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டும் யதார்த்தமான நகைச்சுவை வசனங்கள், காட்சிகளோடு, போலி ஜோதிடர்கள், போலி சாமியார்களின் முகத்திரையை கிழித்திருக்கும் இயக்குநர், மக்களின் அறியாமைதான் அத்தனைக்கும் காரணம் என்பதை சொல்லவும் தவறவில்லை!

கதைக்கும், காட்சிகளுக்கும் பொருத்தமான யதார்த்தமான கிராமத்து மனிதர்களை‌யே தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அரிதாரம் பூசாமல் அழகாக நடிக்க, இல்லை... இல்லை... கதையோடு கதாபாத்திரங்களாக வாழவிட்டு, படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருப்பதால், அறிமுக நடிகர் நடிகைகள் ஒவ்வொருவரும் நம் அக்கம், பக்கத்து வீட்டு ஆசாமிகள் மாதிரி, நம்முள் பச்சாதாபத்தை ஏற்படுத்தி ஒருவித பாசத்தையும் உண்டு பண்ணுவது "வெங்காயம்" படத்தின் பெரும்பலம். 

அதிலும் அந்த நாடக கலைஞராக வரும் மாணிக்கம், மகளை ஊரில் தனியாக விட்டுவிட்டு பாண்டிச்சேரி வந்து, மகனை பறி‌கொடுத்து, காசுக்காக அலைந்து திரிந்து தானும் மரித்து போவது, கல் நெஞ்சுக்காரர்களையும் கரைத்து விடும் காட்சிகள். நாடகக் கலைஞராகவே வாழ்ந்திருக்கும் மாணிக்கம், நிஜத்தில் இப்பட இயக்குநர் ராஜ்குமாரின் தந்தையாவார். தந்தை மேற்படி கதாபாத்திரத்தில் எட்டடி பாய்ந்துள்ளார் என்றால், நூற்பாலை தறியில் வேலை செய்து கொள்ளும் பாத்திரத்தில் நடித்து, போலி ஜோதிடரின் குரூர பலன்களை கேட்டு பயந்துபோய், தற்கொலை செய்து கொள்ளும் பாத்திரத்தில் 16 அடி பாய்ந்து, படம் பார்க்கும் ரசிகர்களின் விழியோரம் கண்ணீர் துவளைகளை வரவழைத்து விடுகிறார் இயக்குநர் ராஜ்குமார். அவர் பேசும் சேலத்து தமிழின் யதார்த்தம் மாதிரியே, கதாநாயகன் அலெக்சாண்டர், கதாநாயகி பவீனா, பெற்றோரை பறிகொடுத்து பழிவாங்க துடிக்கும் சிறுவர் சிறுமிகள், பேரனை பறிகொடுத்த பாட்டி என எல்லோரும் பளீச் பங்களித்திருப்பதும், ரசிகர்களுக்கு அவர்கள் மீது பாச்சாதாபத்தை ஏற்படுத்துவதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்!

கெஸ்ட்ரோலில் "அச்சமென்ன, அச்சமென்ன ஆசைத்தமிழே..." எனத் தொடங்கி தொடரும் புரட்சி பாடல் ஒன்றுக்கு சிறுவர், சிறுமியர்களுடன் ஆடிப்பாடி அசத்தியிருக்கும் அந்த "தகடுதகடு" நடிகர், பெரியார் படத்திற்குப்பின், பிறருக்கு பிரயோஜனமாக நடித்திருக்கும் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்! நடிகர் இப்படத்தில் இப்படி ஒரு பாடலில் இடம் பிடித்திருப்பது பலம் என்றாலும், "தகடு தகடு" நடிகர் வெங்காயம், பெரியாரிசம் என எல்லா தரப்பு ரசிகர்களும் இப்படத்தை காண வருவதற்கு இவரே தடையாக தெரிந்தாலும் தெரிவார் என்பது பலவீனம்!

பரணியின் இசையில் மேற்படி பாடல்கள் மட்டுமின்றி, படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் இரண்டொரு பாடல்களும், பின்னணி இசையும் ஹிட்! ஜெட் என்று அதிரடியில் அசரடிக்கிறது பேஷ், பேஷ்!

பாண்டிச்சேரி நரபலி ஜோதிடரை சேலத்திற்கு சிறுவர்கள் கடத்தி வந்தது எப்படி? என்பது உள்ளிட்ட இன்னும் சில லாஜிக் மீறல் காட்சிகளும், க்ளைமாக்ஸில் சிறுவர்கள் அவர்களது வயதுக்கு மீறி பகுத்தறிவு என்பது பட்டறிவு தான்! என்பதை உணராமல், பகுத்தறிவு பேசுவதும் வேடிக்கை என்றாலும், வாடிக்கையான தமிழ் சினிமாக்களில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும் காரணத்திற்காகவே "வெங்காயம்" படத்தையும், அதன் இயக்குநரையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்!

பகுத்தறிவு வாதிகளிலும் பகற்கொள்ளையர்கள் இருப்பதுபோல், ஜோதிடர் சாமியார்களிலும் போலிகள் உண்டு, அவர்களிடம் உஷாராக இருங்கள்...! என்று போதித்திருக்கும் "வெங்காயம்", பகுத்தறிவு மனம் வீசும் "பெருங்காயம்".

No comments:

Post a Comment