Pages

Saturday, December 10, 2011

ஆனந்த விகடன்


                        

                                   வெங்காயம்
சாமியார்கள், ஜோசியம், பரிகாரம் இவை எல்லாம் உரித்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை என்று சொல்வதுதான்...  'வெங்காயம்!
ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம்.
முதல் படத்திலேயே மூட நம்பிக்கைகளுக்கு எதிராகச் சாட்டையடி கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் சங்ககிரி ராச்குமாருக்கு வாழ்த்துக்கள். 'ரமணா’, 'சிட்டிசன்’, 'சாமுராய்எனத் தமிழ் சினிமா பார்த்துப் பழகி, அலுத்துச் சலித்த கடத்தல் சமாசாரம்தான். ஆனால், மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும்தான் கடத்தல்காரர்கள் என்பதும், அவர்களுக்கு சாமியார்கள் மேல் என்ன கோபம் என்று விவரிப்பதும் திரைக்கதையைப் புதிய ரூட்டில் கூட்டிச் செல்கிறது. படத்தில் பிரசாரம் குறைவாகவும் கிளைக் கதைகள் சுவாரஸ்யமாகவும் இருப்பது ஆறுதல் அம்சம்.
நாயகனாக அலெக்ஸாண்டர். ஊருக்குப் பயந்து ஒதுக்குப்புறத்தில் காதலிக்கும் கிராமத்து போலீஸ் வேடத்தை யதார்த்தமாகப் பிரதிபலித்து இருக்கிறார். 'கார் வளைவுல திரும்பும்போது நாலு வீல் தடம் பதியும். ஆனா, இங்க ரெண்டுதான் இருக்குஎன்று 'புதிய டைப்கடத்தல் வாகனத்தை அவர் கண்டுபிடிக்கும் இடம்... பளிச் ஐடியா. நாயகி பவீனா... பக்கத்து வீட்டுப் பெண். பரிகாரம் என்கிற பெயரில் சாமியார் காமச் சேட்டை செய்யும்போது 'அம்மா புரிஞ்சுக்கோம்மாஎன்று பதறும் இடத்தில் நம்மையும் பதறவைக்கிறார்.
பாசமுள்ள பாட்டியின் பேரனாக இயக்குநர் ராச்குமாரும் பாட்டியாக வெள்ளையம்மாளும் படு யதார்த்தம். தெருக்கூத்துக் கலைஞர் மாணிக்கம் மகனுக்கு மருத்துவம் பார்க்கப் போகும் இடத்தில், குழந்தையை ஏமாற்றிக் கூட்டிப் போய் நரபலி கொடுக்கப்படும் இடம் முகத்தில் அறையும் கொடூரம். மகனுக்காகப் பிச்சை கேட்கும் இடத்தில், 'நம்புங்க சாமி... என் புள்ளை உயிருக்காகத்தான் பிச்சை எடுக்குறேன். நான் நிஜமான கூத்துக் கலைஞன்தான்!என்று நடுத்தெருவில் கூத்துக் கட்டி ஆடும்போது நெகிழவைக்கிறார் மாணிக்கம்.
பரணியின் பின்னணி இசை கடத்தல் காட்சிகள் போன்ற ஒரு சில இடங்களில் ஈர்த்தாலும், முழுமையாக ஈர்க்கவில்லை. ராகுவின் ஒளிப்பதிவில் மலையில் கார் தொங்கும் காட்சி மட்டும் பயமுறுத்துகிறது.
சாமியார்களைத் தள்ளுவண்டி, மண்ணெண்ணெய் பாட்டில், தீப்பந்தம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறுவர்கள் சிம்பிளாகக் கடத்துவதும், யாரும் வராத மலைக் கோயிலில் கட்டிவைத்து கேள்வி கேட்டுத் திணறடிப்பதும், கொலை, பழிவாங்கல் என்று வன்முறைப் பக்கம் போகாமல், சாமியார்களைத் திருந்தச் சொல்லி கட்டுகளை அவிழ்த்துவிடுவதும்.. இயல்பான சுவாரஸ்யம்!
படத்தில் சின்னச் சின்ன கிளைக் கதை களை ஒன்றிணைக்கும் கோவையில் செம ஓட்டை. ஜவ்வாக இழுக்கும் திரைக்கதை ஆங்காங்கே கொட்டாவி விடவைக்கிறது. அடிக்கடி அமுங்கும் டப்பிங் வாய்ஸ், அனுபவம் அற்ற கேமரா கோணங்கள், எங்கே என்று கேட்கவைக்கும் எடிட்டிங் ஆகியவை 'அமெச்சூர்என்பதை அடையாளம் காட்டிவிடுகிறது. ஆனாலும், சமூக அக்கறையுடன் பகுத்தறிவுக் கதை சொன்ன விதத்தில் இந்த வெங்காயம்... காரம்தான்!


No comments:

Post a Comment